Thursday, 21 February 2019

கடம்பாகுளம் ஸ்ரீ பூலூடையார் சாஸ்தா ஸ்தல வரலாறு!!! Kadambakulam Sri Pooludaiyar Saastha temple history!!!

            கடம்பாகுளம் ஸ்ரீ பூலூடையார் 

        சாஸ்தா  ஸ்தல வரலாறு!!!








              
        பல நூறு ஆண்டுகளுக்கு முன் நமது ஐயன் கோவில் சாத்தான்குளம் அருகே அமுதுண்ணாக்குடி குளத்துக் கரையில் அமைந்திருக்கிறது! நமது ஐயனார் விக்ரகம் பரிவார தேவதைகளுடனும் ஆழி பூதங்களும் வாகனங்களுடனும் அமைந்திருக்கிறது !!

       அப்போது கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அதனால் மணியாச்சி அருகிருந்து ஏழு பேர் வேலை தேடி சாத்தான்குளம் பகுதிக்கு வந்துள்ளனர். நம் சாஸ்தா கோவிலருகே அடர்ந்த மரம் செடி கொடி உள்ள வனப் பகுதியில் உணவு சமைத்திருக்கிறார்கள். சோறு சமைத்து பக்குவம் வரும் போது பானை இரண்டாக உடைந்திருக்கிறது. அது பார்த்த அவர்கள் இங்கு ஏதோ தெய்வ சக்தி உள்ளது என்றுணெர்ந்து தேடி நம் சாஸ்தாவை வணங்கியுள்ளனர்!!!

       நம் சாஸ்தா அவர்களுக்கு நல்லாசி கூறி சாப்பிட்டு வருமாறு அனுப்பினார், அவர்கள் வந்து பார்த்த போது சோற்றுப் பானை விரிசல் இல்லாது சாப்பாடு தயாராக இருந்து!

      சாப்பிட்டு விட்டு ஐயனிடம் சென்று தங்களது வறுமையையும் கஷ்டத்தையும் கூறினர். ஐயன் வாருங்கள் நாம் மலையாள தேசம் செல்வோம்! அங்கு மகா துஷ்ட மந்திரவாதி உள்ளான் அவனுக்கு பாடம் புகட்டச் செல்லுகின்றேன், நீங்கள் அங்கு உங்களுக்கு தேவையான செல்வத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி அழைத்துச் சென்றார்.

      மலையாள தேசத்தில் மந்திரவாதியின் கோட்டையில் கதவுகளே இல்லை! கோட்டையின் ஒருபுறம் சுரைக்கொடி இருந்தது, அதனைப் பற்றி உள் சென்று வேண்டிய அளவு செல்வத்தை வாரி எடுத்து வர எழுவரையும் அனுப்பினார் ஐயன்! எழுவரும் வேண்டிய செல்வத்துடன் அமுதுண்ணாக்குடி வந்தனர்!

       ஐயன், "இனி நீங்கள் ஊர் சேர்ந்து நலமுடன் விவசாயம் செய்து வாழுங்கள்! மற்றும் இந்த சுரை கொடியை வளர்க்கவோ, சமைக்கவோ, சாப்பிடவோ, தொடவோ கூடாது என்று ஆசி கூறி அனுப்பினார்!"

      ஆனால் எழுவரும் " அன்புடைய எங்கள் தெய்வமே எங்களுக்கு பொன்னும் மணியும் வேண்டாம் நீங்கள் மட்டும் உடனிருந்தால் போதும்" என்று கைகூப்பி வேண்டி நின்றனர்; ஆனால் ஐயனார் கல் விக்ரகமமாக மாறி நின்றுவிட்டார்! அவ் எழுவரும் அழுதும் தொழுதும் வேண்டியும் ஐயனார் வரவில்லை!

      ஐயனார் விக்ரகத்தை தூக்கி செல்ல முயன்ற போது பாதம் அங்கேயே தங்கியது, மீதமுள்ள சிலையை தூக்கி சென்றனர்!

      கால்நடையாக வரும் போது தென்திருப்பேறை அருகே
மேலக்கல்லாம்பறை கிராமத்தின் அருகே கடம்பாகுளத்தில் இளப்பாறி மீண்டும் விக்ரகத்தை துக்கிச் செல்ல முயற்சித்த போது சிரசு தனியே வந்து உடல் அங்கேயே நின்றுவிட்டது!

     சிரசை எடுத்துச்சென்ற எழுவரும் மருகால்தலை என்ற ஊரில் மலை மீது வைத்து வணங்கி வருகின்றார்கள்! 

      ஆக ஐயனார் மூன்று இடங்களில் "பூலுடையார் சாஸ்தா" என்ற ஓரே பெயரில் கோவில் கொண்டுள்ளார்!

      கடம்பா குளத்தில் உடம்புப் பகுதி மட்டும் இருந்தது! அங்குள்ள சைவ  வேளாளர் கனவில் வந்து தனக்கு பூஜை செய்யும்படி கூறினார்! 

       சுவாமி தாங்கள் யார்? எங்கு? எப்படி வந்து பூஜை செய்வது? என்று கேட்க; அதற்கு ஐயன் நாளை காலை கடம்பாகுளக் கரைக்கு வா அங்கு இரண்டு முதலை இருக்கும்; அதில் ஆண் முதலை வாலை ஆட்டும் அதன் மீது அமர்ந்து கொள்; பூஜைக்கான பெட்டியை மற்றொரு முதலையின் மேல் வைக்கவும்;  முதலை என்னிடம் வந்து சேர்க்கும். நீ வந்து எனக்கு பூஜை செய்!" எனக் கூறி மறைந்தார்!

      மறுநாள் காலை நம்பிக்கையுடன் பூஜைக்கான பொருட்களுடன் கடம்பாகுளக்கறைக்கு வந்துள்ளார். 

     ஐயன் கூறியபடி இரு முதலைகள் இருந்துள்ளன! ஐயனை வணங்கி முதலை மீது அமர்ந்து, உடல் பகுதி இருந்த இடம் இறங்கி பூஜை செய்துள்ளார்! பூஜை முடிந்ததும் பொற்காசு ஒன்றை அளித்து தினமும் வந்து பூஜை செய்யும் படி கூறினார்! மீண்டும் முதலை மீதமர்ந்து கரை வந்தடைந்தார்!

     இவ்வாறாக தினமும் பூஜை செய்து வந்துள்ளார்! ஐயனாரும் தினமும் ஒரு பொற்காசு கொடுத்து பத்திரமாக அனுப்பினார்!

     நாட்கள் சென்றன! பூஜை செய்யும் அவருக்கு வயதான படியால் அவர் "சுவாமி, எனக்கு வயதாகிறது! என்னைப் போல் எனது மக்களும் பூஜை செய்ய வரயிலாது ஆகையால் தாங்கள் கரைக்கு வந்துவிடுங்கள்" பணிவுடன் வேண்டினார்!

     ஐயனாரும் '" சரி நாளை இங்கு வர வேண்டாம்! கரையில் எலுமிச்சம் பழமும் பிச்சிப்பூவும் இருக்குமிடத்தில் எனக்கு பூஜை செய்"' என்றார்!

     மறுநாள் காலை வழக்கம் போல் பூஜைக்கான பொருட்களை எடுத்துக் கொண்டு கரைக்கு வந்தார் அங்கு முதலைகள் இல்லை! அங்கு கரை வழியே ஓரிடத்தில் எலுமிச்சம்பழமும் பிச்சிப்பூவும் இருக்கக்கண்டு அங்கேயே பூஜை செய்தார்! ஐயனாரும் வழக்கம் போல் பொற்காசும் கொடுத்தார்! 

     அந்த இடமே தற்போது நாம் வணங்கிவரும் "ஸ்ரீ பூலுடையார் சாஸ்தா" கோவிலாகும்! 

     அந்த  சைவ வேளாளர் சந்ததிகள் தற்போது நாம் வணங்கிவரும் இக் கோவிலின் பூசாரிகளாக உள்ளனர்!

      இங்கு ஐயனாருக்கு கற்றழியில் கோவில் கட்டி, பரிவார தெய்வங்கள் சமைத்து அவர்களுக்கும் மண்டபம் கட்டி, ஆழி சாஸ்தா மற்றும் வாகனம் அமைத்து ; மிகச் சிறப்பாக பூஜை மற்றும் பங்குனி உத்திர விழாவினையும் செய்து வருகின்றோம்!

     இம்மாதிரியான கோவில்களை இருபத்தோரு பூடம், அறுபத்திநான்கு வல்லையம் எனப்படும்! 

      ஓவ்வொரு ஊரின் வடகிழக்குப் பக்கம் இருப்பார்கள் காவல் தெய்வங்களாக! குல தெய்வங்களாக!

      இதற்கு இருபத்தியோரு தெய்வங்களும்; அதற்கு அறுபத்திநான்கு பரிவர தெய்வம் எனப்படும்! 

      இவர்கள் அனைவரும் நமது ஆறு வழிபாட்டில் ( சைவம், வைணவம், சாக்தம்,  கணபதியர்த்தம், கௌமாரம், சௌரம்) பரிவார தெய்வமாக வருகின்றனர்! 

      ஆக மொத்தம் எண்பத்திஐந்து தெய்வங்களாகும்!  


      இவர்களுக்கு தலைமையாக ஐயனார் உள்ளார்! பூத நாயகன் எனப்படுகிறார்! 

     ஐயனார், துய வெள்ளை குதிரையில் ஆரோகிணித்து வருகிறார்!

     இந்த நம் ஐயனாருக்கு கருப்பு நிறம் விருப்பமில்லை!  தூய வெண்மையை விரும்புகிறார்! அவருக்கு சைவப் படையல் மட்டுமே போட விரும்புகின்றார்! தன்னை தரிசிக்க வருபர்களிடம் கொழுமையும், பரிவட்டமும் சர்க்கரைப் பொங்கலும் விரும்புகின்றார்! இம்மாதிரியான விருப்பம் அனைத்து ஐயனார் கோவிலிலும் ஒரே மாதிரியாகவே உள்ளது!

     ஒரு சில இடங்களில் சுருட்டும் படைக்கப்படுகிறது!

  •  கொழுமை - நல்லெண்ணை
  •  பரிவட்டம் - வெள்ளை வேஷ்டி

      இந்த குலதெய்வங்களுக்கு வழிபடும் மக்கள் பல ஜாதிகளிலும் இருப்பார்கள்! 

      தெய்வத்திற்கு ஜாதி பாகுபாடே கிடையாது!

     பல ஊர்களில் தெய்வம் யாரின் மேலாவது அருளாடிவரும்! அங்கு நாம் நமக்கு வேண்டியதை "குறி அல்லது கணக்கு" சொல்வதாக கேட்டு நம் வாழ்க்கையில் வளம் பெறலாம்!

      எங்கு சென்றாலும் அங்கு வரும் அருளாடிவரும் தெய்வம் தான் இன்னார் என்று தனது பெயரைச் சொல்லும்!

      ஆனல் ஐயனார் மட்டும் தான் இன்னார் என்று கூறாமல் "நான்" வந்திருக்கிறேன் என்று மட்டும் கூறுவார்!!!

      நாம் வணங்கும் ஐயனாரப்பன்  மூன்று ஊர்களில் ஓரே பெயரில் ஊள்ளார்!

          1. (பாதம்) அமுதுண்ணாக்குடி.

2. (ஊடல்) கடம்பாகுளம்.

3. (தலை) மருகால்தலை.

நன்றி! வணக்கம்!! வாழ்க வளமுடன்!!!


6 comments:

  1. பூலுடையார் சாஸ்தா கோவிலில்
    நவகிரகங்கள் இல்லை. இருப்பினும்
    கோவில் சுற்றுச்சுவரில் நாக சிலைகள்
    இருப்பது ஏன்

    ReplyDelete
  2. சாஸ்தா கோவில் அருகே உள்ள மாடசாமி போன்ற பிற சாமியை பற்றி சொல்ல வில்லை


    ReplyDelete
  3. நன்றி வணக்கம்,வாழ்த்துக்கள், கோடான கோடி.

    ReplyDelete